search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேலம் மாணவி"

    • இளைய மகள் அமுதா மட்டும் வீட்டில் இருந்ததால் உயிர் தப்பினார்.
    • பிளஸ்-2 பொது தேர்வில் அமுதா முதல் மதிப்பெண் எடுத்துள்ளார் .

    சேலம்:

    சேலம் மாவட்டம் இளம்பிள்ளை கல்பாரப்பட்டி செவ்வாய்காடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம். தறி தொழிலாளி. இவரது மனைவி மாரியம்மாள். இந்த தம்பதிக்கு பூங்கொடி மற்றும் அமுதா ஆகிய 2 மகள்கள். இதில் இளைய மகள் அமுதா, மாற்றுத்திறனாளி ஆவார்.

    இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 6-ந்தேதி தன்னுடைய மாமியார் வீட்டுக்கு செல்வதற்காக வெங்கடாசலம், தனது மனைவி மாரியம்மாள், மகள் பூங்கொடி ஆகியோரை அழைத்துக் கொண்டு மோட்டார்சைக்கிளில் மல்லூருக்கு சென்று விட்டு திரும்பியபோது கார் மோதி விபத்துக்குள்ளாகி 3 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

    இளைய மகள் அமுதா மட்டும் வீட்டில் இருந்ததால் உயிர் தப்பினார். பிளஸ்-2 பொது தேர்வில் அமுதா முதல் மதிப்பெண் எடுத்துள்ளார் . ஆனால், பெற்றோரை இழந்ததால் அவரால் மேற்படிப்பை தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அவர் பலரிடமும் உதவி கோரினார்.

    இதுபற்றி அமுதா உருக்கமாக கூறியதாவது:-

    கடந்த ஜூன் மாதம் 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அப்பா, அம்மா, அக்கா 3 பேருமே விபத்தில் இறந்துட்டாங்கா. எனக்கு உடல் சார்ந்த பிரச்சனை சின்ன வயதில் இருந்தே இருக்கு. நான் அதையும் மீறி படிக்கணும் என நோக்கமாக இருந்தேன். எனக்கு படிக்கணுங்கிற ஊக்கம் கொடுத்தது முதலில் உலகத்திலேயே ரொம்ப முதல் ஆசிரியர் யாருனு கேட்ட அப்பா, அம்மா என சொல்வேன்.

    பள்ளிக்கு அக்கா தான் என்னை கூட்டிட்டு போயிட்டு வருவாங்க. நான் ரொம்ப சிரமப்பட்டு இருந்தேன் . அப்புறமாக நான் மெடிசன் எடுத்துக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு எல்லாம் போய் பார்த்தோம். அதற்கு அப்புறம் கொஞ்சம் சரியாயுடுச்சு.

    அதற்கு அப்புறம் படிப்பு நல்லா தொடர முடிஞ்சுது. இப்ப நான், 11, 12-ம் வகுப்பு இரண்டுலையும் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்து இருக்கேன். ஆனாலும் இப்ப அந்த சந்தோஷத்தை கொண்டாட யாரும் இல்ல. கல்வி தொடரணும். கிரீன் இங்க்-ல சைன் போட்டு ஏழைகளுக்கு உதவனுங்கிறது தான் 3 பேருடைய ஆசையாக இருந்தது.

    எனக்குனு என்னுடைய குடும்பத்தில யாரும் இல்லனாலும் குடும்பத்தில் ஒருத்தரா அரசு முன்வந்து உதவி செய்யணும் என எதிர்பார்க்கிறேன். இப்போது என்னுடைய ஆசை நிறைவேற்றனுன்னா தயவு செய்து அரசு தொடர்ந்து உதவி செய்யணும். இதை என்னுடைய வேண்டுகோளாக வைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனையடுத்து சமூக ஆர்வலர்கள் சிலர் அவருக்கு கல்லூரியில் சேர உதவி செய்தனர். மேலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இது பற்றி தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பந்தப்பட்ட மாணவி அமுதாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

    இதனையடுத்து, சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாணவியை நேரில் அழைத்து அவருக்கு கலெக்டர் கார்மேகம் ஆறுதல் தெரிவித்ததோடு, வாழ்வின் முன்னேற்றத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்வதாகவும், மருத்துவ செலவு, கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணத்திற்கான செலவை ஏற்பதாகவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.

    மேலும் மாணவிக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் வீடு கட்டிக் கொள்ள வீரபாண்டி கல்பாரப்பட்டியில் பசுமை வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனைக்கான ஆணையை நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கலெக்டர் கார்மேகம் வழங்கியதோடு, வீடு கட்டிக்கொள்ள போதுமான நிதியையும் ஒதுக்கீடு செய்தார்.

    இதை தொடர்ந்து மாணவி அமுதா, தன்னுடைய கோரிக்கையை ஏற்று உதவி செய்த தமிழக அரசுக்கும், முதலமைச்சருக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்தார்.

    ×